கடந்த ஓராண்டாக தங்களது வார்டு கவுன்சிலரை காணவில்லை என சமூக வலைதளங்களில் போஸ்டர் பதிவிட்டுள்ளனர் நாகை நகராட்சியின் 25வது வார்டு பொதுமக்கள். யார் அந்த கவுன்சிலர்? பொதுமக்கள் அவரை தேடுவது ஏன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….
சமூக வலைதளங்களில், காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு தேடப்பட்டு வரும் நாகப்பட்டினம் நகராட்சியின் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் தான் இவர்.
கவுன்சிலராக பதவியேற்று ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை, அவரது வார்டில் எந்த அடிப்படை தேவைகளையும் ஜாகிர் உசேன் செய்து கொடுக்கவில்லையாம். சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை செய்து கொடுக்க வில்லை…. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை…. சாக்கடை கலந்து வரும் குடி தண்ணீரை சரி செய்யவில்லை… தெரு விளக்கு அமைத்து தரவில்லை…. என இப்படி பல இல்லைகளை அப்பகுதி மக்கள் முறையிட்டும் திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி கவுன்சிலரை காணவில்லை என சமூக வலைத் தளங்களில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில், காணவில்லை என்று தலைப்பிட்டும், நாகப்பட்டினம் நகராட்சி 25 வது வார்டு நகராட்சி உறுப்பினர் ஜாகிர் உசேன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 25 வது வார்டு எந்த தெருவிலும் காணப்படவில்லை. காண்போர் உடனடியாக தெருவாசிகளிடம் தெரிவிக்கவும். இப்படிக்கு 25 வது வார்டு மக்கள் என தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், விரைவில் இதே போன்று நாகை நகராட்சியின் திமுக பிரதிநிதிகள் குறித்து போஸ்டர்கள் கிளம்பும் என்று பதில் இடுகிறார்கள் நாகை மாவட்ட நெட்டிசன்கள்.
Discussion about this post