மீண்டும் இணையும் இளையராஜா-எஸ்.பி.பி: இது ஒரு பொன்மாலை பொழுது

கலையுலகம் எப்போதும் சச்சரவுகளுக்கு பெயர்போனது. கலை தொடங்கிய காலம் முதலாய் இந்த நிலைமாறியதே இல்லை. அந்த வரிசையில் கடைசியாக நாம் கடந்துபோன சர்ச்சைகளுள் ஒன்று இரண்டு இசைராஜர்களுக்கு இடையிலானது. பண்ணைபுரத்து பாட்டு தெய்வம் இளையராஜாவும், எல்லா மனதுக்கும் ஏற்ப பாடும் இசைநாயகன் எஸ்.பி.யும் பகிரங்கமாக பகைத்துக்கொண்ட நிகழ்ச்சி அது.

இளையராஜாவின் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அங்கே ஆஸ்தான பாடகர்களாக அலங்கரிக்கும் லெஜண்டுகளில் எஸ்.பி.பி முக்கியமானவர். ஆனால் திடிரென்று இளையராஜா எஸ்.பி.பிக்கு ஒரு நோட்டிஸ் அனுப்புகிறார். அது இனி எஸ்.பி.பி எங்கும் தன் பாடல்களை பாடக்கூடாது என்று வலியுறுத்தும் நோட்டிஸ்.

எஸ்.பி.பியும் இதற்கு பதிலளிக்கும் விதமாக தன் முகநூல் பக்கத்தில் “இனி இளையராஜாவின் பாடல்களை நான் எங்கும் பாடப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதனால் நான் அமைதியாக முடிக்க நினைத்ததை ஊரறிய சொல்லியதால் மனவருத்தமடைந்தார் இளையராஜா. அவ்வளவே..!!!

இரண்டையும் இப்போது ஒரு ஒரு வரிகளில் சொல்லிவிட்டோம் ஆனால் பின்புலத்தில் யார் பக்கம் சரி? யார் பக்கம் தவறு என்பதெல்லாம் ரசிகர்களுக்கு கிஞ்சீத்தும் தேவையில்லாத செய்தி.

உழைக்கத் தயார்தான். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் வராதிருக்கும்போது அதுவே இன்னோரு இடத்தில் சேர்ந்துகொண்டே இருக்கும்போது கொஞ்சம் கடினமாகத்தான் கையாள வேண்டியிருக்கும். அப்படித்தான் தன் ராயல்டி பிரச்சினையை கையாண்டார் இளையராஜா. எப்போதும் போல இளையராஜா பக்தர்கள் இவர்பக்கமும், எஸ்.பி.பி பக்தர்கள் அவர்பக்கமும் கொடிபிடித்தனர். பின்புலத்தில் இளையராஜா எஸ்.பி.பி இருவருக்குமே ஒத்துப்போகாத நடவடிக்கைகள் நடந்ததுதான் இந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம்.

40 ஆண்டுகால நட்பில் இது ஒரு பெரும் பிரச்சினை கிடையாதுதான். ஆனால் வழக்கம்போல வலைவாசிகள் ( அதாங்க நெட்டிசன்கள் ) கைவரிசைகாட்டி இளையராஜாவும், எஸ்.பி.பி யும் குடிமிசண்டை போடுவதாய் திருகிவிட்டனர். ஆனால் இன்று வரைக்கும் தினமும் இரவு இளையராஜாவும் எஸ்.பி.பியும் என் காதுக்கு இணைந்தே வருகின்றனர்.

சிலகாலங்களாக இளையரஜாவின் மேடையில் எஸ்.பி.பி இல்லாதது ஏக்கம் தான் என்றாலும், எதிர்வரும் ஜூன் 2 ம் தேதி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியால் இழந்த இன்பம் திரும்ப வந்ததாய் திக்கெட்டும் பரப்பி திசைதோறும் மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அதே வலைவாசிகள்.

எது எப்படியோ இசையுலகின் துரோணரும் , இறவாப்பாடல் பீஷ்மரும் இணைந்து அரங்கேற்றப்போகும் அந்த மேடை ஏக்கத்திலிருந்தவர்களுக்கு அருமருந்து. இசையுலக பகைகளுக்கு முறிமருந்து. ஆரோக்கியமான நட்புறவை மீண்டும் புதுப்பித்திருக்கும் இவர்களின் கூடலுக்காக இருவரும் சேர்ந்து ஒத்திகை வேறு பார்க்கிறார்களாம்.. என்ன தரத்தில் வரப்போகிறது என்பதை எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் இசைதெய்வம் இதைக்கேட்க மரண வெய்ட்டிங் என்றுதான் சொல்லவேண்டும்…

Exit mobile version