இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை சமீபத்தில் நிறைவேற்றியது. சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் வலியுறித்தினர். இதையடுத்து அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து இந்த பிரச்னை குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த முதலமைச்சர், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கப்படுவதாகவும், திமுக நாளை நடத்தும் பேரணியால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post