விடியா திமுக ஆட்சியில் தமிழக மக்களை அதிர வைக்கும் வகையில் கடந்த 10 நாட்களில் 23 கொலைகள் அரங்கேறியுள்ளது அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை நகரமாக்கி பதைபதைக்க வைத்துள்ளது.
கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக இருந்த நிலையில், விடியா திமுக ஆட்சிக்கு வந்த 26 மாதங்களில் தமிழகம் வன்முறைக் களமாகி, கொலை நகரமாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், காரில் கால்நடைகளுக்கு தீவனப்புல் கொண்டு வந்த விவசாயி சிவராமை, மர்மகும்பல் வழிமறித்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. திருச்சியில் மனைவியின் கண்முன்னே குப்புசாமி என்பவர் 6 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே திருச்சியில் பெயிண்டர் வேலை செய்து வந்த தீபக், கறி விருந்து என்று கூறி அழைத்து செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை வீட்டுக்கு முன்பே வெட்டி சாய்க்கப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில் ரவுடி கல்லறை அப்பு என்கிற சதாம் உசேன் வெட்டிக் கொலை. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். சென்னை பாடிகுப்பத்தில் மாந்திரீகம் செய்து வந்த சிக்கந்தர், கஞ்சா வியாபாரியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரும், பெண் காவலரின் தந்தையுமான செந்தில்வேல் என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இதேபோல் மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலரான சந்திரபாண்டியனும் மர்மகும்பலால் வழிமறித்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கூலி தொழிலாளி செல்வதிரவியத்தை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசியல் பிரமுகரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. இப்படி, அரசியல்பிரமுகர்கள், வெகுஜனங்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என பலரும் கொலையாகி உள்ளனர். இந்த கொலைச் சம்பவங்களில், ஈடுபட்டுள்ள கொலையாளிகளை தண்டிக்க முடியாத காவல்துறையாலும், வேடிக்கை பார்க்கும் திமுக அரசாலும் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து 26 மாதங்களில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கையோ அச்சமும், பதற்றமும் நிறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுகவின் திராவிட மாடல் சித்தாந்தமா? விடியல் தருவதாகக் கூறிக் கொண்டு இருளில் தள்ளும் திமுக ஆட்சியில் இருந்து எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.