தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சொலவடை உண்டு. அதாவது “ வெளியிலிருந்து கோவில்பட்டியை நோக்கி கல்லைத் தூக்கி எறிந்தால், கல்படும் தலை ஒரு எழுத்தாளனின் தலையாகத்தான் இருக்கும்”. இது ஒருவகையில் உண்மைதான். அந்த அளவிற்கு எழுத்தாளுமைகள் நிறைந்த மண் அது. கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்தால் அதில் பலர் இடம் பிடிப்பார்கள். அவர்களில் கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகிரிசாமி ஆகியோர்களே முதலிடம் பிடிப்பார்கள்.
அவர்களில் எழுத்தாளர் கு.அழகிரிசாமிக்கு இந்த நடப்பு ஆண்டானது நூற்றாண்டு ஆகும். அதனையொட்டி அவரது படைப்புகள் அடங்கிய விலையில்லாப் பிரதியினை தன்னறம் நூல்வெளிப்பதிப்பகமானது வெளியிட தீர்மானித்தது. முக்கியமாக இந்த விலையில்லாப் பிரதி இளம் வாசகர்களின் கைகளுக்கு சென்று சேர வேண்டும் என்று முடிவெடுத்து, இந்நற்காரியத்தில் இறங்கியது.
தற்பொது கு.அழகிரிசாமியின் விலையில்லாப் பிரதியானது ஒவ்வொரு இளம் வாசகர் கைகளுக்கும் கொண்டுசெல்லும் வேலையினைத் தொடங்கியிருக்கிறது. அதன்படி கு.அழகிரிசாமியின் இந்த விலையில்லாப் பிரதி தொகுப்பில் 11 கதைகள், 7 கட்டுரைகள், 14 சிறுவர் கதைகள், கடிதங்கள் போன்ற அவரது படைப்புகள் அடங்கியுள்ளன. இந்தத் தொகுப்பின் தொகுப்பாசிரியர் கவிஞர் ராணிதிலக் ஆவார். விலையில்லாப் பிரதி பெறுவதற்கான தொடர்பு எண் : 9843870059