தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து வினாடிக்கு 898 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 898 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது.
இதனையடுத்து, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், வினாடிக்கு 724 கனஅடி நீரும், வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் வினாடிக்கு 174 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக, பாரூர் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. அணையின் நீர்வரத்து குறையும் பட்சத்தில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post