இதுக்கெல்லாம் கூடவா இப்படி பண்ணுவாங்க என்பதுபோல் நடந்திருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுவில் கலந்து குடிக்க கூலிங் சோடா தரவில்லை என்பதற்காக மளிகைக் கடை உரிமையாளரையும் அவரது உறவினர்களையும் கடித்துக் குதறிய இரண்டு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, தூயமணி இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு செம மப்பில் இருந்திருக்கின்றனர். மேலும் மது அருந்த நினைத்தவர்கள் அதில் கலப்பதற்காக கூலிங்கான சோடா வாங்குவதற்கு புதுமோட்டூர் பகுதியில் அமைந்துள்ள சென்றாயன் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது சென்றாயன் கூலிங் சோடா இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனால் போதையில் இருந்த சுப்பிரமணியும் தூயமணியும் அவருடன் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் எங்களுக்கே கூலிங் சோடா இல்லையா என ஆவேசப்பட்டவர்கள் கடை உரிமையாளர் சென்றாயனை பற்களால் கடித்துக் குதறியிருக்கின்றனர்.
இதனை தடுக்க முயன்ற உறவினர்களான குறளரசன், நவீன்குமார், மாணிக்கம் ஆகியோரையும் சைடீசாக நினைத்து ரத்தம் வரும் அளவிற்கு விடாமல் துரத்தி துரத்திக் கடித்திருக்கின்றனர். கை, கால், முகம் என்று கிடைத்த இடமெல்லாம் கடித்து வைத்திருக்கின்றனர். மதுபோதையில் யாரை கடிக்கிறோம் எதற்காக கடிக்கிறோம் என்றே தெரியாமல் இரண்டு பேரும் கடித்துக் குதற, இப்படிக் கடித்ததில் சுப்பிரமணிக்கு இரண்டு பற்களும் கீழே விழுந்துவிட்டன. சுப்பிரமணியிடமும் தூயமணியிடமும் கடி வாங்கியவர்கள் வலி தாங்காமல் அலறித் துடித்திருக்கின்றனர்.
இப்படி கடித்தவர்களும் கடி வாங்கியவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சுப்பிரமணியையும் தூயமணியையும் போலீசார் கைது செய்தனர். கூலிங் சோடா இல்லை என மளிகைக் கடைக்காரர் கூறியதால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் நான்கு பேரை ரத்தம் வரும் அளவிற்கு பற்களால் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
– செய்தியாளர் ஜி.பிரபு மற்றும் பா.சரவணகுமரன்