அரசியல் காழ்ப்புணர்ச்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு கோவையில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 8 குளங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தபோது குறிச்சிக்குளம் ஏரியையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என, அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்தார். இதனையடுத்து உடனடியாக இத்திட்டத்திற்கு ஒப்புதலும், நிதியும் வழங்கினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. இதனை தொடர்ந்து குறிச்சிக்குளம் ஏரி பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக 20 அடி உயரத்தில், 3 டன் எடை கொண்ட எஃகை பயன்படுத்தி, திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விளக்கும் வகையில் 3 ஆயிரம் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தனித்துவமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
இதே போல் ஜல்லிக்கட்டு விளையாட்டு நினைவுச் சின்னம், உயர்தர வசதிகளோடு கூடிய பொழுதுபோக்கு பூங்காக்கள், செல்ஃபி பாயிண்ட், உடற்பயிற்சிக்கான நடைபாதைகள், ஓய்வெடுக்க அமரும் இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, கோவையில் வரலாறு காணாத வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் கூட கோவை மாவட்ட மக்களுக்கென ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுகவின் கோட்டையாக கோவை திகழ்ந்து வருவதால் தொடக்கம் தொட்டே கோவையை காழ்ப்புணர்ச்சியோடே விடியா அரசு அணுகி வருகிறது.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்ததற்காக கோவைக்கு மத்திய நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விடியா அரசு கோவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை தானும், கழக பொதுச்செயலாளரும் பலமுறை சுட்டிக்காட்டி வந்தோம் எனவும், அஇஅதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக கோவையில் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்தற்கான தர வரிசையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கோவைக்கு இச்சிறப்பை பெற்றுத் தந்தமைக்காக கோவை மக்கள் சார்பாக புரட்சித் தலைவி அம்மா மற்றும் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விடியா அரசு இனிமேலும் கால தாமதம் செய்யாமல், கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளைக் கூட முறையாக பராமரிக்காமல் உதாசீனப்படுத்தி வருகிறது விடியா அரசு. அதிமுக ஆட்சியில் அழகுப்படுத்தப்பட்ட கோவை மாநகர் தற்போது குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.