கீழடியில் கிடைத்த முற்காலத்து படிக எடைக்கல்!

தமிழர்களின் நாகரீக கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று கீழடி ஆகும். கீழடி தமிழரின் தாய்மடி என்று குறிப்பிடுவதும் உண்டு. தற்போது கீழடி அகழாய்வில் எட்டு கிராம் எடைகொண்ட படிக எடைக்கல் கிடைத்துள்ளது. இது சங்ககாலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தகவல் கூறுகின்றனர்.

எட்டு கிராம் படிக எடைக்கல்..!

கடந்த அதிமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் எட்டுக் கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டது. பல்லாயிரக் கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் இவற்றை மக்களின் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். எட்டு கட்டங்களாக நடைபெற்ற ஆய்வு தற்போது ஒன்பதாம் கட்டத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, கொந்தகை மற்றும் அகரம் உள்ளிட்ட இடங்களில் 9-ஆம் கட்ட ஆய்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கும் மொத்தம் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஒன்பதாவது குழியைத் தோண்டிகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட ஆறு அடி ஆழத்தில் படிகத்தால் செய்த எடைக்கல்லானது வெளி தெரிந்தது.

படிக கல்லின் வடிவம்..!

இந்த எடைக்கல்லானது சற்று கோள வடிவில் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், ஒளிப்புகும் தன்மையுடனும் காணப்படுகிறது. 2 செண்டி மீட்டர் விட்டம், 1.5 செண்டி மீட்டர் உயரம் மற்றும் சரியாக 8 கிராம் எடையுடனும் உள்ளது. இந்த எடைக்கல்லானது தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணப் பொருட்களை எடைபோடுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 8 கிராம் எடையில் இந்த படிக கல் இருப்பதால் அவ்வாறு கருதத்தோன்றுகிறது என்று தொல்லியலாளர்களும் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுடு மண்ணால் செய்த வட்டச்சில்லுகள், ஆணி, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவையையும் அதே அகழாய்வு குழியில் கிடைத்துள்ளதாக மாநில தொல்லியல் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version