திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒன்றிய குழு தலைவரின் கணவர் கட்ட பஞ்சாயத்து செய்யும் போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் தமயந்தி. இவரது கணவர் ஏழுமலை ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி தலைவர்களிடம் அதிகாரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர்கள் பயனாளிகளை தேர்வு செய்து பட்டியலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்துள்ளனர். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவரின் கணவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்த பயனாளிகளை ஒதுக்கிவிட்டு அவருக்கு தேவையான நபர்களை இந்த பட்டியலில் இணைத்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி கேட்டவர்களை மிரட்டும் தோனியில் பேசிய ஏழுமலையை கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலரை அவரது அறையில் முற்றுகையிட்டு 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், மேல் பாலானந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் என்பவரிடம் ஏழுமலை மிரட்டும் தோனியில் பேசிய ஆடியோவும் தற்போது சமூக வலை தலங்களில் வேகமாக பரவி வருகிறது.