மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட, தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில், தமிழகத்தின் சங்ககால நாகரிகத்திற்கான சான்றுகள் என்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் கீழடியில் அகழாய்வின் போது கிடைத்த சில தொல்பொருட்கள் அவற்றின் காலத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. கார்பன் டேட்டிங் எனப்படும் கரிம பகுப்பாய்வு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகளின்படி கீழடி தொல் பொருட்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியானது.
அகழாய்வு செய்த இடத்தில் கிடைத்த எலும்பு துண்டுகள் மூலம் காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்குப் பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சங்ககால தமிழ் மக்கள் வேளாண்மையில் சிறந்து விளங்கினர் என்பதை அறிய முடிகின்றது.
களிமண், செங்கல், இரும்பு ஆணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்டிருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் கட்டடக் கலையில் சங்ககால தமிழ் மக்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
கி.மு ஆறாம் நூற்றாண்டை சார்ந்த, தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்று இருப்பதற்கு ஆதாரமாக பெயர்கள் பொறிக்கபட்ட பானை ஓடுகள் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மண்பானை, நூல் நூற்கும் தக்களிகள், கூர்முனை கொண்ட எலும்புக் கருவிகள், தங்க அணிகலன்கள் போன்றவையும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
கீழடியில் கிடைத்த விளையாட்டுப் பொருட்கள், அரவைக் கல், கைவினைப் பொருட்கள், சுடுமண் உருவங்கள் ஆகியவற்றின் மூலம் கீழடியில் தமிழர்கள் 2600 ஆண்டுகள் முன்பே சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக மூத்த நாகரிகங்களில் ஒன்றாகத் தமிழர்களின் கீழடி இருந்துள்ளது உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post