ஜம்மு காஷ்மீர் மாநிலம் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சென்னை பெரம்பூரில் தயாரிக்கப்பட்டதாகும். இவ்வகையில் முதல் ரயில் டெல்லி – வாரணாசி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இரண்டாவதாக டெல்லிக்கும் – ஜம்மு காஷ்மீரின் காத்ராவுக்கும் இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பின் வந்தேபாரத் ரயிலின் மாதிரி ஒன்றை பியூஷ் கோயல், அமித் ஷாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது பேசிய அமித் ஷா, 370ஆவது சட்டப்பிரிவை நீக்கும் வரை காஷ்மீரின் முன்னேற்றத்துக்குப் பல தடைகள் இருந்ததாகத் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில் போக்குவரத்தால் காஷ்மீரின் வளர்ச்சிப் பாதை நோக்கிய பயணம் தொடங்கும் எனத் தெரிவித்தார். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகக் காஷ்மீர் திகழும் என அமித் ஷா குறிப்பிட்டார்.