தமிழ்நாட்டில் நிதிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா 3வது அலை அச்சத்தால் கோயில்கள் மூடப்பட்டு வரும் நிலையில், கோடிக்கணக்கில் ஆடம்பரச் செலவு செய்து கருணாநிதி உருவப்படத்தை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு போதிய நிதி இல்லை என்று கூறி கைவிரித்த தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், நிதிச்சுமையை காரணம் காட்டி, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு திமுக அரசு கடன் பத்திரங்களை ஏலத்தில் விட்டுள்ளது. தமிழகத்தின் நிதிச்சுமை இப்படி இருக்கும் நிலையில், கொரோனா 3ம் அலை அச்சத்தால், கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா 3வது அலை அச்சமும், நிதிப்பற்றாக்குறையும் தமிழகத்தை வாட்டி வரும் நிலையில், எதைப் பற்றியும் கவலப்படாத திமுக அரசு கருணாநிதி உருவப் படத் திறப்பு விழாவை ஆடம்பரமாக கொண்டாட இருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இத்தகையை சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் கருணாநிதி உருவப்பட திறப்பு விழாவை கோடிக்கணக்கில் செலவு செய்து ஆடம்பரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருணாநிதிக்காக அவரது மகன் கொண்டாடும் விழாவை அரசு விழாவாக்கி, கோடிக்கணக்கில் செலவு செய்வது நியாயம்தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலையில், அதிமுக சார்பிலும் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பிலும் ஆட்சேபங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக அரசு இனியாவது, கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.