கர்நாடக மாநிலத்தில் சீரமைப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிக்காக மத்திய அரசு உடனடியாகப் பத்தாயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வெள்ளச்சேதம் பற்றி விளக்கவும், சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியைக் கேட்டுப் பெறுவதற்காகவும் வரும் 16ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கப் போவதாகவும் எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடகாவில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன 12 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.