கர்நாடகாவில் 3 நாடாளுமன்றம் மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 இடங்களில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி காலை முதல் நடைபெற்றது. மாண்டியா, சிவமோகா, பெல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஜம்கண்டி, ராம்நகர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில் ராம்நகரில் மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியும் ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருமான அனிதா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மாண்டியாவிலும் ஜேடிஎஸ் வேட்பாளரான சிவராம கவுடா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பெல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜம்கண்டியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆனந்த் சித்து வெற்றி பெற்றார். சிம்மோகா மக்களவை தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாக இத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post