விருத்தாசலம் அருகே வெளியூரில் இருந்து காது குத்துவதற்காக கோயிலுக்கு வந்தவர்கள் மீது உள்ளூர்க்காரர்கள் தாக்குதல் நடத்தியது களேபரமாகி உள்ளது. கறிசோறு விருந்து கல்லெறிந்து தாக்கும் அளவுக்கு மாறியது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
கோயிலில் காதுகுத்தும் நிகழ்வுக்காக வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்ட நபர் இவர்தான்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தை சேர்ந்த குமரவேலும், அவருடைய சகோதரர் சிவதாஸும் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் குலதெய்வக் கோயிலான கோமங்கலம் அய்யனார் கோயிலுக்கு வந்துள்ளனர். குலதெய்வம் முன்பு தங்களது, குழந்தைகளுக்கு காது குத்தி, சாமிக்கு படையல் போட்டு கறி விருந்து வைத்தனர்.
அந்த கறிவிருந்தில், கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், முதல் பந்தியில் சாப்பிட்டுள்ளனர். இரண்டாவது பந்தியிலும், உள்ளூரைச் சேர்ந்த, அரசு நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் பணியாளர்களான மணிகண்டன், ஜெயபிரகாஷ் மற்றும் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது குமரவேல் குடும்பத்தினர், வெளியூரிலிருந்து வந்திருக்கும் தங்களின் குடும்பத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னும் சாப்பிடவில்லை. எனவே, கொஞ்சம் பொறுங்கள் அடுத்த பந்தியில் உட்காரலாம் என்று கூறியுள்ளனர். கறிசோறு விருந்துக்கு அடுத்தபந்தியா என்று ஆத்திரமடைந்த தொழிலாளர்களுக்கும், சாமி கும்பிட வந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது.
இதையடுத்து கோமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி சாமி கும்பிட வந்தவர்களை தாக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன வெளியூர்க்காரர்கள், கோயிலுக்குள் சென்று பதுங்கிக் கொண்டுள்ளனர். ஆனாலும் விடாது கல்லை எறிந்தும், கட்டையாலும் தாக்கியதிலும், குமரவேல் என்பவரின் மண்டை உடைந்தது. சிவதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என யாரையும் பார்க்காமல் அனைவரையும் சரமாரியாக கற்களை கொண்டு தாக்கியதாகவும், இந்த களேபரத்தில் தங்கச்செயினை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
உயிர் பயத்தில் வெளியூரில் இருந்து வந்த பலரும் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், காதுகுத்து நிகழ்ச்சிக்காக வந்த மயிலாடுதுறை மண்ணங்குடியை சேர்ந்த சக்திவேல், ரமேஷ் ஆகிய இருவரும், வெளியே செல்ல முடியாமல், கோயிலுக்குள்ளேயே மாட்டிக் கொண்டதால், அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு, கோவிலை சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது..
இதனை அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சக்திவேல் மற்றும் ரமேஷை பத்திரமாக மீட்டனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது, கிராமத்தினர் அதனை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரண்டு பேரையும் பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காது குத்து விழாவில் கறிசோறு போட்டது தப்பாடா… என விழாவை ஏற்பாடு செய்தவர் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து குமுறும்படி செய்த ஊரை நினைத்தாலே ஒரு நிமிடம் குலை நடுங்க தான் செய்கிறது….