மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தடைகாலம் முடிந்து மீன்பிடித்து வந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடல் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் காரைக்கால் மீனவர்கள் கடந்த 60 நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 14ம் தேதி நள்ளிரவுக்கு மேல் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நான்கு, ஐந்து நாட்கள் கழித்து விசைப்படகு மீனவர்கள் இன்று காலை அதிக அளவிலான மீன்களைப் பிடித்துக் கொண்டு கரை திரும்பினர். ஆனால் கரைக்கு வந்த பிறகு மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் காரைக்கால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சங்கரா, சீலா, பன்னா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி 3 ஆயிரத்தில் இருந்து 4000 வரை விலை போகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 1500 ரூபாய்க்கு தான் விலை போனதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.