அரசு மருத்துவமனைகள் என்பது அலட்சியத்தின் உச்சமாக மாறி வருகிறது இந்த விடியா ஆட்சியில். தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதெல்லாம் நாள்தோறும் நாம் கடந்து வருகிற செய்திகளாக உள்ளது.
சமீபகாலமாக், பிறந்த பச்சிளம் குழந்தை, பிரசவித்த இளம் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் உயிரிழந்து வருவதும் அரசு மருத்துவமனைகளின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்ததற்கான காரணத்தை இதுவரை அவரது கணவரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மழுப்பி வருகிறது மருத்துவமனை நிர்வாகம்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. அண்மையில் கூட காஞ்சிபுரம் மருத்துவமனையில் கழிவறைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அங்கேயே பிரசவமாகி பச்சிளம் குழந்தை கழிவறை குழியில் விழுந்து உயிரிழந்த கொடூர சம்பவம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர். ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள டீக்கடையில் இருந்து பிளாஸ்டிக் டீ கப் ஒன்றை வாங்கி வந்து அதில் ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து பைப்பை சொருகி, அதன்மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
((ப்ரீத்))
ஆனால், தனது துறையில் நிகழும் அவலங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை மட்டுமே குறியாக வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். விழிப்புணர்வு என்னும் பெயரில் மாரத்தானில் ஓடும் நேரத்தை துறையை கவனிப்பதற்கு செலவழித்திருந்தால் இன்று பல உயிர்கள் பலியாகி இருக்காதல்லவா? சரி, அவர் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளாவது முறையாக நடத்தப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. மதுரையில் நிகழ்ந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இத்தனை அலட்சியமாக அடுத்தவர் உயிரைக் கையாளும் நபரிடம் சிக்கி சுகாதாரத்துறை மரணப்படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறது.
செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நிர்வாகம் தத்தளித்து வருகிறது. ஆனால், அமைச்சர் மட்டுமல்லாமல், பொம்மை முதலமைச்சரும் கூட இதையெல்லாம் கவனிக்காமல், தந்தை பெயரை இன்னும் எங்கெல்லாம் சூட்டலாம் என்பதிலேயே குறியாக உள்ளார்.
Discussion about this post