ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக, காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி முதல் பக்தர்களை, சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், காளஹஸ்தி கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கோயில் திறப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கோயில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பின்னர், இன்று அதிகாலை மஹா சாந்தி யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணி முதல் கோயில் ஊழியர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாளை முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் அடையாளமிடப்பட்டுள்ளன.
Discussion about this post