ஸ்ரீமுஷ்ணத்தில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஆதிவராகநல்லூரை சேர்ந்த பரமானந்தன் என்ற
விவசாயிக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது.
இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், விவசாயி பரமானந்தன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியபோது, இதையும் ஏன் பாரம்பரிய முறையில் நடத்தக்கூடாது? என்று அவருக்கு தோன்றியுள்ளது.
எனவே, திருமண விருந்தில் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், சாதரண அரிசியில் தயாரிக்கப்படும் சாதத்திற்கு பதிலாக குதிரை வாலி அரிசி சாதம் என அனைத்தையுமே பாரம்பரிய முறையில் செய்துள்ளார்.
அதோடு, திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவதற்காக விதைப்பந்துகள், மூலிகை மரம் மற்றும் செடிகளின் கன்றுகள் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.
இப்படி, பாரம்பரிய முறையில் நடைபெறும் திருமணம் பற்றி கேள்விபட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனடியாக அந்த திருமணத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டனர்.
பின்னர், ஏர்கலப்பை ஒன்றை திருமண பரிசாக அளித்து மணமக்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்கள், உங்களை போன்ற விவசாயிகளால் தான் பாரம்பரிய முறையிலான விவசாயம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது என்று அவர்களை பாராட்டிச்சென்றனர்.
முற்போக்காக செய்கிறேன் என்று நம் பாரம்பரியத்தை சீர் குலைக்கும் வகையில் பிற்போக்காக திருமணம் செய்துவருபவர்களுக்கு மத்தியில் பழமை மாறாமல் பாரம்பரிய முறையில் நடைபெற்ற விவசாயி பரமானந்தன் வீட்டு திருமணம் அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
Discussion about this post