இணையத்தில் வீடியோக்கள் வைரலாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், ஒவ்வொரு வீடியோவும் சுமந்து வரும் செய்தியும் அது ஏற்படுத்தும் தாக்கமுமே அவற்றில் கவனிக்கப்பட வேண்டியவை. அனத வரிசையில் இணையவாசிகளின் கண்களைக் கண்ணீராக்கி வருகிறது #justiceforbruno என்ற தனியடைவு (hashtag).
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அடிமலத்துரா கடற்கரையில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ பதிவு அது. அதே கடற்கரைப் பகுதியில் வசிக்கும் கிறிஸ்துராஜ், 7 ஆண்டுகளாக ப்ரூனோ என்ற நாய்க்குட்டியை வளர்த்து வந்தார். அந்தப் பகுதியில் பலருக்கும் அறிமுகமான ப்ரூனோ, தினமும் கடற்கரைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ( ஜூன் 28) ப்ரூனோ காணாமல்போக, தேடிச்சென்ற கிறிஸ்துராஜுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று இளைஞர்கள் ப்ரூனோ அங்கு கிடப்பதாக தகவல் சொல்ல, போய் பார்த்தால் செத்து கடலில் மிதந்தது ப்ரூனோ. உடலெங்கும் காயங்கள். அடிபட்டு இறந்திருக்கிறது. விசாரித்தபோது அந்த இளைஞர்கள்தான் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ப்ரூனோவின் கழுத்துப் பட்டையை மீன்பிடிக்கும் பெரிய தூண்டிலில் மாட்டி, ஃபைபர் படகு ஒன்றில் தொங்கவிட்டு, தடிமனான கம்பால் அடித்தே கொன்றுள்ளனர். இதை வீடியோ எடுத்த யாரோ ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட, விவரம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விவகாரம் சமூக வெளிக்கு வந்துள்ளது. ப்ரூனோவின் கொலைக்கு நியாயம் கேட்டு இணையவாசிகள் குரலெழுப்பி வருகின்றனர்.