பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டும் என்னும் அடிப்படையில், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக ஜே.பி. நட்டா செயல்படுவார் என்றும், வரும் டிசம்பர் மாதம் வரை கட்சியின் தலைவராக அமித்ஷா நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவரான ராஜ்நாத் சிங், அமித் ஷாவின் தலைமையில் பாஜக அமோக வெற்றியை பெற்று இருப்பதாகவும், உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளதால், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி. நட்டாவை தேர்வு செய்து கட்சியைப் பலப்படுத்த பாஜக ஆட்சி மன்றக்குழு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதால், கட்சித்தலைவர் பொறுப்பை வேறு ஒருவருக்கு கொடுக்கவேண்டும் என அமித்ஷா விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.