முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை நிகழ்த்தினார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலை, அம்மா மருந்தகம், அம்மா உணவகம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்தார்.
முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகவும், சிசிடிவி கேமரா பொருத்துவதிலும் தமிழகம் முன் மாநிலமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளதையும் சுட்டிக் காட்டினார். இந்த மாநாட்டின் மூலம் 27 நிறுவனங்கள் மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்நிறுவனங்கள் 50 ஆயிரத்தி 444 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை புரிந்த மாநிலமாகவும், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.