1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழக அரசியலில் திருப்புமுனை வாய்ந்த நாள். ஏன் முக்கியமான நாள் என்று சொன்னால், வரலாற்றை நாம் பின்சென்று பார்க்க வேண்டும். அன்றைக்கு ஆளும் கட்சியாக திமுக இருந்தது. முதல்வராக கருணாநிதி இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அன்றைய சட்டசபையில் பட்ஜெட் உரை விவாதத்திற்குள் சென்றது. முதல்வர் கருணாநிதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே கருத்து யுத்தம் அரங்கேறியது. அன்றைய தினத்தில் திமுகவினர் நமது புரட்சித் தலைவி அவர்களை சட்டசபையில் தாக்கினர். பிறகு தரைகுறைவாய் பேசினர்.
அப்போது சட்டசபையில் எல்லோர் முன்னிலையிலும் புரட்சித் தலைவி அவர்கள் ஒரு சபதம் எடுத்தார். இனிமேல் சட்டசபைக்குள் வரமாட்டேன் என்றார். உடனே எதிரிகளின் உதடுகள் மெதுவாக புன்னகைத்தன். ஆனால் அவர் முழுவதுமாக சொல்லி முடிக்கவில்லை. ஜெயலலிதாவாகிய நான் இனி சட்டசபைக்குள் வரமாட்டேன், அப்படி வரும்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் வருவேன் என்று சூளுரைத்தார். ஆம் அது நடந்தது. 1991 ஆம் ஆண்டு சூலை 24ஆம் தேதி எங்கு அவமானப்படுத்தப்பட்டாரோ அங்கேயே முதல்வராக பதவியில் அமர்ந்தார். யாரெல்லாம் அவரை தாக்கினார்களோ அவர்களில் சிலர் புரட்சித் தலைவிக்கு எழுந்து மரியாதை செலுத்தினர். தாக்கப்பட்ட அன்றைக்கு சட்டசபையில் தனியாக விழுந்து கிடந்தார். மீண்டும் சட்டசபைக்குள் வரும்போது தமிழகமாக வந்தார். என்றென்றும் இரும்பு பெண்மணி அவர்தான்.