அம்மா என்றால் அன்பு..புரட்சித் தலைவியின் சாதனைகள்!

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாளாகும். தமிழகம் முழுவதும் இன்று அவருடைய பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியலை மாற்றி அமைத்த பெண் சிங்கமென வலம் வந்த அம்மையாரின் சாதனைகள் சொல்லி மாளாதது. ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 1992ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தினைத் தொடங்கினார். அதற்கு காரணம் கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் அவலம் நடந்துகொண்டிருந்தது. இதனால் பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் ஆகியோரை அரசே வளர்க்கும் என்று இத்திட்டத்தைக் கொண்டு வந்தார் புரட்சித் தலைவி அவர்கள். அன்று முதல் தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்படுகிறார்.

புரட்சித் தலைவி அவர்களின் முக்கியமான திட்டமாக மகளிர் காவல்நிலையம் தமிழகம் முழுவதும் கொண்டுவந்ததை சொல்லலாம். பெண்களின் பிரச்சினைகளுக்கு என்று தனியாக மகளிர் காவல் நிலையம் வேண்டும் என்று முடிவு செய்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது வரை இது நடைமுறையில் உள்ளது. அதேபோல கள்ளச்சாராயம் ஒழிப்பு, லாட்டரி சீட்டுத் தடை, நில அபகரிப்புச் சட்டம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  மிகவும் முக்கியமான ஒரு சாதனை என்னவென்றால் ஏழை எளிய மக்களுக்கு பசியாற உணவு வழங்க வழிவகை செய்ததுதான். அதுதான் அம்மா உணவகம் திட்டம். இன்று வரை ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை குறைந்த செலவில் போக்குவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

ஏழை எளிய மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கி அவர்களின் கல்விக்கு உதவினார். தாலிக்கு தங்கம் மற்றும் திருமணத்திற்கு உதவித்தொகை ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள். இன்றைய அவரது பிறந்தநாளில் அவரது சாதனைகளையும் அவரது நினைவுகளையும் நெஞ்சில் நிறுத்திப் போற்றுவோம்.

Exit mobile version