ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்க வேண்டாம்: தோனி

இந்திய அணி முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த பிறகு சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மேற்கு இந்திய தீவுக்கு எதிரான இந்திய அணியிலும், தோனியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இதனால், அண்மைக்காலமாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவாரா? மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்து வருகிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே, அவருடைய எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி, தன்னுடைய எதிர்கால திட்டம் உள்ளிட்ட எந்தவொரு கேள்விளையும், ஜனவரி மாதம் வரை கேட்க வேண்டாம் என்று ஓய்வு குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பே பதிலளித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வென்று மும்பைக்குத் திரும்பியபோது மக்கள் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது எனத் தெரிவித்தார். 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின்போது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோதே ரசிகர்கள் வந்தே மாதரம் என முழக்கமிட்டதும் மறக்க முடியாத நிகழ்வு என தோனி குறிப்பிட்டார்.

ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுடன் முக்கியமான தொடர்களில் விளையாட இருப்பதால், இதை மனதில் வைத்தே, ஜனவரி வரை எதுவும் கேட்க வேண்டாம் என்று தோனி சொல்வதாக தெரிகிறது.

Exit mobile version