மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் Article 370.. ஓயாத காஷ்மீர் பிரச்சினை!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ஆனது ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரனை வர உள்ள நிலையில், தான் அந்த வழக்கை எப்போதோ வாபஸ் வாங்கிவிட்டதாக வழக்கை தொடர்ந்த  ஷா ஃபாசில் திடுக்கிடும் தகவலைத் தற்போது கூறியுள்ளார்.

மாநில அந்தஸ்து..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரானது தன்னிச்சையாக செயல்படும் என்று அதனை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜா ஹரிசிங் முன்மொழிந்தார். அப்போது நடைபெற்ற சில அரசியல் குழப்பங்களால் இந்தியாவுடன் இணைவதற்கு சில நிபந்தனைகளுடன் ராஜா ஹரிசிங் ஒத்துக்கொண்டார். அதன்பிறகு சட்டப்பிரிவு 370 ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்தானது கொடுக்கப்பட்டது. அதாவது காஷ்மீரின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல்தொடர்பு போன்ற துறைகளுக்கு சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பும் கோரப்பட்டது. 1951 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சட்ட மன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு தனி அரசமைப்பு வழங்கப்பட்டு 1957 ஜனவரி 26 ஆம் நாள் சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370…!

இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கும் மத்திய அரசுக்கும் ஒரு இணைப்பு பாலம் என்று சொல்லலாம். அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காஷ்மீரின் முதல்வர் ஷேக் முகமது அப்துல்லா இது தொடர்பாக  ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்று இரட்டை குடியுரிமை கொண்டுவரப்பட்டது. தேசியக் கொடியைத் தவிர்த்து காஷ்மீருக்கு என்று தனி மாநிலக் கொடி வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. மேலும் அதன் சட்டமன்றத்தின் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் நிரந்தர குடியாளர்கள் யார் என்று வரையறுப்பது அரசமைப்பு பிரிவின் 35A  ஆகும். இது சட்டப்பிரிவு 370ம் ஒரு பகுதியாகும். இதன்படி இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் மற்றும் சொத்துக்கள் என்று எதுவும் வாங்க முடியாது. சட்டப்பிரிவு 360ன் படி நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அவரசநிலை பிரகடனப்படுத்த முடியும். ஆனால் இது காஷ்மீருக்கு பொருந்தாது. குடியரசுத் தலைவருக்கும் உரிமை கிடையாது. மற்ற நாடுகளுடன் போரிட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையைக் கொண்டுவர முடியும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களின் பொருட்டும் இன்னும் சில அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சட்டப்பிரிவானது நீக்கப்பட்டது.

 

 

 

 

Exit mobile version