ஜாலியன் வாலாபாக் நினைவுதினம்..!

இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு என்றால் அதுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலைதான். அந்த துயரம் அரங்கேறி இன்று 104வது ஆண்டு ஆகிறது. சுதந்திரப் போராட்டத்தின் வடுவான ஜாலியன் வாலாபாக் பற்றிய கட்டுரையைப் பார்க்கலாம்.

அது 1919 காலகட்டம்… சிட்னி ரெளலட் எனும் ஆங்கில நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து பிரிட்டீஷ் அரசு `ரெளலட் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி வாரண்ட் இன்றி, விசாரணையின்றி எவரையும் கைது செய்யலாம், காவலில் வைக்கலாம். ஆங்கிலேயரின் இந்த அடக்குமுறை சட்டத்தை எதிர்க்கும் வகையில்
பல்வேறு போராட்டங்கள் அரங்கேறின. அப்படி பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் வழக்கறிஞரான டாக்டர் சைபுதீன் கிட்சுலு, மருத்துவரான டாக்டர் சத்யபால் ஆகிய இருவரையும் ஆங்கிலேயர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவ்விருவரையும் விடுதலை செய்யக்கோரி நடந்த கலவரத்தில் 25 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

இருவரையும் விடுதலை செய்யக் கோரியும், அரசாங்க அடக்குமுறைக்குப் பலியானோருக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் இரங்கல் கூட்டம் 13 ஏப்ரல்1919 அன்று நடந்தது.

கூட்டத்தில் தலைவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ​​பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டயர் தலைமையில் அங்கு வந்த பிரிட்டிஷார் பொதுமக்கள் வெளியேறும் பாதையை அடைத்தபடி நின்று, எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கியால் சூடத் தொடங்கினார்கள்.

10 நிமிடங்களில் மொத்தம் 1650 தோட்டாக்கள் சிதறின. துப்பாக்கியின் குண்டுகளுக்கு பயந்து அங்கிருந்த கிணற்றில் மக்கள் குதிக்க, சடலங்களால் நிறைந்தது அந்த கிணறு. ஜெனரல் டயர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று கூறப்பட்டாலும் ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

104 ஆண்டுகள் ஆகியும், மக்களின் மனதில் ஆறா வடுவாக இருக்கிறது ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு. அப்படி உயிர் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை நல்ல முறையில் பேணி பாதுகாப்பதே, நாம் அந்த வீரர்களுக்கு செய்யும் கைமாறு!

– ராஜா சத்யநாராயணன், செய்தியாளர் .

 

Exit mobile version