ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார்.
ஆந்திராவில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 151 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனை இன்று மாலை 4.30 மணியளவில் சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். இதையடுத்து வரும் 30 ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, டெல்லியில் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நாளை காலை விமானம் மூலம் டெல்லி செல்லும் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, ஆந்திராவின் நீண்டகால கோரிக்கையான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.