ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் வீடுகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் ஸ்ரீநிவாஸின் விஜயவாடா வீடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படும் 3 பிரபல கட்டுமான நிறுவனங்கள் உள்பட 40 இடங்களில் கடந்த 6 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, போலி ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தது போல் ஆவணங்களை தயார் செய்தும், கணக்குகளை முறையாக பராமரிக்காமலும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையில் 85 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 71 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 25 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டுள்ளன.