முச்சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட தமிழ் மொழியை வளர்ப்பது, பாதுகாப்பது, போற்றுவது நம்முடைய கடமை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் கலாச்சார மன்றம் மற்றும் உலக தமிழ்ச் சங்கம் மதுரை இணைந்து நடத்திய முத்தமிழ் விழா இணைய வழியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது, உலக மொழிகளுக்கு எல்லாம் உயர் மொழியாய் திகழ்வது தமிழ் மொழி என்று குறிப்பிட்டார்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மொழியான தமிழ் மொழியைப் புகழ்ந்து போற்றிட வேண்டியதும், பாதுகாக்க வேண்டியதும், வளர்க்க வேண்டியதும் நமது கடமை என்று குறிப்பிட்டார். முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சிறப்பு திட்டங்கள் உருவாக்கி தமிழை வளர்க்க பாடுபட்டதாகக் குறிப்பிட்டார்.
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்றும் அவர் தெரிவித்தார். 40 கோடி ரூபாய் செலவில் மதுரை உலக தமிழ் சங்கத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், தமிழை வளர்க்க பல்வேறுத் திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.