இஸ்ரோவின் குரலாக இருந்த தமிழக விஞ்ஞானி வளர்மதி மரணம்!

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மரணம்!

இந்தியா தற்போது விண்வெளித்துறையில் தொடர்ந்து சாதித்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணங்களாக, சந்திரயான் – 3 விண்கலம் வெற்றி மற்றும் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி நம் இந்திய விண்வெளித்துறையே வெற்றி களிப்பில் இருந்துகொண்டு இருக்க, தற்போது ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் பல ராக்கெட்கள் ஏவுவதற்கு கவுண்டவுன் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் தற்போது மரணம் அடைந்துள்ளார்.

கவுண்டவுன் கொடுத்த வளர்மதி..!

சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய  நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார். 2012-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு  இருக்கிறார். தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர். சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டு, நிலவின் தென்பகுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனைப் படைத்தது. அதற்கும் கவுண்டவுன் கொடுத்தவர், வளர்மதி அவர்கள்தான்.

மாரடைப்பால் மரணம்!

விஞ்ஞானி வளர்மதி அவர்கள், தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். கல்லூரிப் படிப்பினை அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பயினறார். பிறகு கோயமுத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியியல் பொறியியல் படிப்பையும், சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மின்னனுவியல் மற்றும் தொடர்பியலில் எம்.இ படிப்பினையும் கற்றுத் தேர்ந்தார் 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு ரேடார் இமேஜ் சாட்டிலைட் – 1ன் திட்ட இயக்குநராக பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்காலம் விருதும், 2017-ல் இந்து தமிழின் தமிழ் திரு விருதும் பெற்றுள்ளார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளர்மதி அவர்கள், தற்சமயம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு இந்திய விண்வெளித்துறைக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

Exit mobile version