குண்டு வெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? என்று, அந்நாட்டு அதிபர் சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் கடந்த மாதம் 21-ம் தேதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனா, தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஐ.எஸ். அமைப்பால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளை எதிர்க்க முடியவில்லை என்றார். எனவே, தங்கள் செயல்பாட்டினை உலகிற்கு நிரூபிக்கும் வகையில், தாக்குதல் நடத்த அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.