ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், விவாசாயிகள் நடவு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீர் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் போக பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, ஜூலை 12ம் தேதி வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் 22 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. டிசம்பர் 8ம் தேதி வரை 150 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் ஆர்வமுடன் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அணையையொட்டிய பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.