மனிதர்கள் இவ்வுலகை ஆள நினைத்ததிலிருந்து யார் மேலோன்? யார் கீழோன்? என்ற வரையறையானது ஒவ்வொருவரின் மனதிலும் எழத் தொடங்கிவிட்டது. இந்த முரணே ஆண்டான் அடிமை சமூகத்திற்கும் வழிகாட்டியது. பின்னாளில் நிலம் வைத்திருப்பவனே உயர்ந்தவன் என்கிற நிலவுடைமைச் சமூகம் தன்னை ஒரு உயர்ப்பிரிவாகக் காட்டிக்கொண்டு வளரத்தொடங்கியது. பிற்காலத்தில் செய்யும் தொழிலை வைத்து சாதிகள் பிரிக்கப்பட்டு நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற சமூகச் சிக்கலுக்கு வழிகோலி தற்போதுவரை இந்த சிக்கல் தொடர்கிறது. இது போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு பலர் வெகுண்டெழுந்து குரல் கொடுத்தனர். அவர்களில் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர், பெரியார் என்று ஒரு மாபெரும் சகாப்தியர்களே உள்ளனர். இவர்களில் முதன்மையானவரான அனைவராலும் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனின் பிறப்பு நாள் இன்று.
யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற ஊரில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன். பெரியார் போன்ற தலைவர்களுக்கே முன்னோடி இவர்தான். சாதியால் சிக்குண்டு நசுங்கி கிடந்த மக்களை 125 ஆண்டுகளுக்கு முன்பே திரட்டி ஒரு அமைப்பாக்கியவர். 1893ல் ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்திலும், 1895ல் சென்னை டவுன் ஹாலிலும் இவர் கூட்டிய மாநாடுகள் தமிழ்நாட்டு ஆதிதிராவிட மக்களை உயிர்த்தெழச் செய்தது. மேலும் 1893 முதல் 1900 வரை ஏழு ஆண்டுகள் அவர் நடத்திய “பறையன்” என்ற இதழ் அச்சமூக மக்களின் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கொண்டு சென்றது. முதலில் மாதப்பத்திரிகையாவும் பின்னர் வாரப்பத்திரிகையாவும் மாறியது. 1904 தென்னாப்பிரிக்காவில் அரசாங்க வேலையில் சேர்ந்து, 1921ல் தாயகம் திரும்பினார். ஆனால் அவரின் முதன்மையான விருப்பமாக லண்டன் சென்று தாழ்த்தப்பட்டோரின் இடர்களை எடுத்துக்காட்டி பிரிட்டிஷாரின் கவனத்தைப் பெறுவதாக இருந்தது. ஆனால் அச்சமயம் அது கைகூடவில்லை. மேலும் எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தர் போன்ற தலைவர்களோடும், காந்தியடிகள் மற்றும் அண்ணல் அம்பேத்கருடனும் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் இரட்டைமலை சீனிவாசனுக்கு உண்டு.
பட்டியலின மக்களை ஒரு அமைப்பாக்கி அவர்களின் பிரச்சினைகளைப் பேசியது மட்டுமல்லாமல் அவர்களை பவுத்தத்தை நோக்கி தழுவச் செய்ததிலும் இந்திய அளவிலி இரட்டைமலை சீனிவாசன் தான் முன்னோடித் தலைவர் ஆவார்.
ஆதிதிராவிடர்கள் என்ற பெயர்வர காரணம்?
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பட்டியல் சமூக மக்களும் “ஆதி திராவிடர்கள்” என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று போராடி, அதற்காக நீதிக்கட்சி காலத்திலேயே அரசாணை வெளியிட வைத்தார். திராவிடம் என்ற அடையாளத்தை சாதியற்ற அடையாளமாகப் பார்த்தவர்களில் அவரும் ஒருவர். ஆகவேதான் அவரது எண்பதாவது பிறந்தநாளில் “திராவிட மணி” என்ற பட்டமானது அவருக்கு சூட்டப்பட்டது. இந்தியா முழுதும் உள்ள பட்டியலின மக்களை “ஹரிஜன்” என்று காந்தியடிகள் அழைத்தபோது பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1938 டிசம்பர் மாதம் சென்னை மாகாண சட்டசபையில் “சமூக கஷ்ட நிவாரண மசோதா” சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அந்த விவாதத்தில் இரட்டைமலை சீனிவாசன், அந்த மசோதாவின் பிரிவு 2-ல் ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் ஆதிதிராவிடர்கள், ஷெட்யூல்டு ஜாதிகள் என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று திருத்தத்தை முன்மொழிந்தார். “ஒரு வகுப்பினரைக் கடவுளின் குழந்தைகள் என்று கூப்பிடுவதில் அர்த்தமில்லை. மற்றவர்களெல்லாம் சைத்தான் பிள்ளைகளா? ஆதிதிராவிடர் என்ற வார்த்தையே தாழ்த்தப்பட்டவருக்குத் தகுதியானது. அதுவே சரித்திர பூர்வமான பெயர்” என்று உறுதியாக கூறினார். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வலுத்தது. ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றவில்லை.