பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது, இந்தியாவின் பாணியில், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்போவதாக, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானில் பிப்ரவரி 13 ஆம் தேதி, பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பங்கரவாத அமைப்பே நடத்தியுள்ளதாக, ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும், பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி, அண்டை நாடுகளை அழிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த அணுகுண்டை வைத்திருக்கும் பாகிஸ்தான், அவர்கள் மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, விரைவில் இந்தியாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.