அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டின் தூதரை ஈரான் அரசு திடீரென கைது செய்துள்ளது.
ஈரானின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் டிரோன் தாக்குதலில் கொன்றதற்காக, பழிவாங்கும் எண்ணத்தில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த சமயத்தில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் நடுவானில் தீப்பிடித்து கீழே விழுந்து வெடித்து சிதறியதில், 176 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் விமானத்தை ஈரான் தான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் சில வீடியோக்களை வெளியிட்டனர். இதனை ஈரானும் ஒப்புக்கொண்ட நிலையில், அங்கு மாணவர்களும், இளைஞர்களும் போரட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அமிர் கபிர் பல்கலைக்கழகம் அருகே பிரிட்டன் தூதர் ராப் மெக்கைரை ஈரான் பாதுகாப்புப் படையினர் சில மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்திருந்து பின்னர் விடுவித்தது தெரியவந்துள்ளது. போராட்டத்தை தூண்டிய குற்றச்சாட்டில் அவரை ஈரான் அரசு தடுப்புக்காவலில் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் தூதரை சிறைபிடித்தது, சர்வதேச விதிகளை மீறிய செயல் என பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.