இது ஆடி மாதம். ஊரெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அதுபோல கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா காலம் எது என்றால் அது ஐபிஎல் தான். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும், இது என் டீம்., இது உன் டீம் என்று பிரித்துப் பார்த்து ரசிகமனப்பான்மையில் சில்லறையை சிதறவிடுவார்கள். சி.எஸ்.கே. மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்கள் இடையே ஒரு கேங் வாரே நடக்கும் அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும். அனல் பறக்க பறக்க இந்தப் போட்டியில் குறுக்க இந்த கவுசிக் வந்தா என்பதுபோல இருக்கும் ஒரு அணிதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று அழைக்கப்படும் ஆர்.சி.பி அணி.
விராட் கோலி என்ற ஒற்றைப் பெயருக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு உள்ளார்கள். பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது ஐ.பி.எல் தொடங்கி, ஆனால் இன்று வரை ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்பது பெருந்துயராக ரசிகர்களின் மனதில் உள்ளது. அது ஓர் ஆறாவடுதான். இருப்பினும் ஆர்.சி.பி அணிக்கு பின்னால் ஒரு பட்டாளே இருக்கிறது. தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு என்று அவர்கள் படாரென துயரத்தை தூர விரட்டி வீறு நடை போடுவதில் வல்லவர்கள்.
ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி என்பது போல கெயில், கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டார்க் என்று ஆர்.சி.பி அணியே கோலோச்சிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அணியிலிருந்து விலக கோலி எனும் ஒற்றை ஆளுமை இப்போது வரைக்கும் அணியை கூட்டிக்கொண்டு வந்துள்ளார். தற்போது அணியில் கோலி, டூ ப்ளஸிஸ், மேக்ஸ்வெல். டிகே என்று ஒரு புஜபல பராக்கிரமசாலிகளே இருந்தும் அவர்களால் ஏதோ சிறு சிறு காரணங்களால் கோப்பையை வெல்ல முடியாமல் போகிறது. இதற்கான காரணத்தைதான் ஒவ்வோர் ஆண்டும் கண்டுபிடிக்க முனைகிறார்கள். தற்போது ஆர்.சி.பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சஞ்சய் பங்கர், அவரது பதவிகாலம் முடிந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்த ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் பங்காரின் பதவிக்காலம் வருகிற செப்டம்பரில் முடிவடைய உள்ள நிலையில் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆர்சிபி அணியுடன் இணைவதை நினைத்து பெருமை கொள்வதாகவும், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல ஆவலோடு காத்திருப்பதாகவும் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி ஃபிளவர் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.