பெண்களுக்கான மத வழிபாடு உரிமை, சுதந்திரம் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சபரிமலை மட்டுமில்லாமல், அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், பெண்களுக்கான மத வழிபாடு உரிமை, சுதந்திரம் குறித்தும் விசாரிக்க உள்ளதாக, தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார். பல்வேறு மத வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கு, புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் எழுப்பிய 7 கேள்விகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.
மேலும், சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது சரியே எனவும், மத விவகாரங்களில் எந்தளவுக்கு பொதுநல வழக்குகளை தொடுக்க அனுமதிக்க முடியும் என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாகவும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.
Discussion about this post