ஆட்டோவினால் ஏற்படும் மாசுவை குறைக்கும் வகையில், பேட்டரியால் இயங்க கூடிய எலக்ட்ரிக் ஆட்டோக்களை, ஒரு தனியார் நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் டீசலில் இயங்கக்கூடிய வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த நிதியாண்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். ஹூண்டாய் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் காரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிமுகம் செய்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றி M – AUTO என்ற தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் ஒன்றரை லட்சம் ஆட்டோக்களும், தமிழகத்தில் 10 லட்சம் ஆட்டோக்களும் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு தற்போது 400 டன் அளவு கரியமில வாயு வெளியாகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
40 ரூபாய் செலவில், வெறும் 4 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் பண்ணினால் போதும், இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களில் 100 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கான குறைந்த கட்டணம், தற்போது சராசரியாக 30 ரூபாயாக உள்ள நிலையில், இந்த ஆட்டோக்களில் குறைந்த கட்டணத்தை 7 ரூபாய் என நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
இந்த ஆட்டோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பிளாக் டவுன் என்ற நகரத்தின் மேயரான ஸ்டீபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ஒட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் பாதுகாப்பான பயனமாக அமையும் எனவும், ஆட்டோவில் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டிருப்பதாகவும் ஆட்டோ குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்…
இதனையடுத்து எலக்ட்ரிக் ஆட்டோக்களின் பேரணி நடைபெற்றது.
ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கும் கட்டண செலவை பாதியாக குறைப்பதோடு, சுற்றுச்சூழல் மாசடைவதை பெருமளவு குறைக்கும் என்பதால் நிச்சயமாக இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அனைவராலும் வரவேற்க தக்க ஒன்றே