ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினமானது கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தத் தினம் கடைபிடிக்க காரணம் வங்கதேசம் தான். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் என்று இரண்டாக பிரிந்தது. மேற்கு பாகிஸ்தான் இப்போதைய பாகிஸ்தானாகும். கிழக்கு பாகிஸ்தான் தற்போதைய வங்கதேசம் என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானின் மொழியாக வங்க மொழி இருக்க வேண்டும் என்று 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ல் வங்கமொழி இயக்கம் உருவானது.
இந்த இயக்கத்தில் உள்ள போராட்டக்காரர்களின் கடுமையான போராட்டத்தாலும் சிலத் தியாகிகளின் உயிரிழப்புகளினாலும் 1956ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவினைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடவேண்டும் என்று வங்கதேச கவிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998 ஆம் ஆண்டு ஐநாவின் யுனஸ்கோவில் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து யுனஸ்கோ 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.