உலகப் பாரம்பரிய தினம் – சிறப்புக் கட்டுரை..!

உலகெங்கும் அமைந்துள்ள பாரம்பரிய சின்னங்களை அந்தந்த நாடுகள் பாதுகாத்து போற்றிக்கொண்டாடுவதோடு அதன் பெருமைகளை வளரும் தலைமுறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் உலகப்பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அது குறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்..

மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவைகளைக் கொண்டாடும் வகையிலும் போற்றிப் பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச அளவில் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி மனித ஆற்றலின் அதிசயங்களாய் உருவான கோவில்கள், கட்டிடங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், அகழாய்வில் கிடைக்கும் படிமங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூறவும் அதனைப் போற்றிப் பாதுகாக்கவும் உலக பராம்பரிய தினம் ஏப்ரல் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. யுனெஸ்கோ நிறுவனம் அதனை அடுத்த ஆண்டு அங்கீகரித்த நிலையில், அதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

இந்த தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.

இந்த நாளில், புராதன கட்டிடங்களின் பெருமைகள் குறித்து கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது, புராதன சுற்றுலா தளங்களில் கட்டணமின்றி பொதுமக்களை அனுமதிப்பது, ஊடகங்கள் வழியாக இந்த நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்கள் மத்தியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்வது உள்பட பல்வேறு பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இந்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமும் (ஏ.எஸ்.ஐ.) மாநில அரசின் தமிழ் நாடு தொல்லியல் கழகமும் பாதுகாத்து பராமரித்து வருகின்றன.

இந்த நாளில் நமது அருகாமையில் அமைந்துள்ள புராதன சின்னங்கள், அகழாய்வு பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதும், அதன் பெருமை குறித்து நமது பிள்ளைகளுக்கு தெரிவிப்பதுமே அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்யும்.

பாரம்பரியங்களை போற்றுவோம்; அதன் பெருமைகளை உலகறியச் செய்வோம்…

– ஆசாத்.

Exit mobile version