ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா பகுதிகளில் உள்ள விமான தளங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருதரப்பிலும் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்களில் தாக்குதல் நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தீவிரவாத தாக்குதல் குறித்து முன்னதாகவே உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை அந்நாடு அலட்சியப்படுத்தியதால், அங்கு பல இடங்களில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விமான தளங்களின் தாக்குதல் குறித்து உளவுத்துறையின் முன்னெச்சரிக்கையை அடுத்து அந்தப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பில் பாதுகாப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விமான தளங்களில் பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.