சென்னையில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாகவும், மழைநீர் கட்டமைப்பை இதுவரை அமைக்காதவர்கள் உடனடியாக அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்கக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் ஒரு குழு அமைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என 2 லட்சத்து 72ஆயிரத்து 61 கட்டடங்களில் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளதாகவும், 38 ஆயிரத்து 507 கட்டடங்களில் சிறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 69ஆயிரத்து 490 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க அறிவுறுத்தப்பட்டு, செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயன்பாடற்ற 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 339 இடங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.