இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையை சேர்ந்த இரண்டு சிறுமிகளை இளைஞர் ஒருவர் கேரளாவிற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…
இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தைகள் கூறி கடவுளின் தேசத்திற்கு சிறுமிகளை கடத்த முயன்ற புகாரில் போலீசார் இந்த ரோமியோவை தேடி வருகிறார்கள்.
சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்லால் தசாரமின், இரண்டு மகள்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும், மாணவிகள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் மூழ்கி கிடந்ததாக சொல்லப்படுகிறது. இதனை பெற்றோர் பலமுறை கண்டித்தும், சிறுமிகளால் இன்ஸ்டாகிராமில் இருந்து விடுபட முடியவில்லை.
இந்த நேரத்தில் சிறுமிகளிடம், மேத்தா பாரத் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர், ஆசை வார்த்தைகளை கூறி மூளைச்சலவை செய்துள்ளார். சிறுமிகளை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கேரளா மாநிலத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார் அந்த ரோமியோ. இளைஞரின் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமிகள் இருவரும், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கேரளாவுக்கு செல்ல சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர்.
இதனிடையே, மோகன்லாலுக்கு பள்ளியில் இருந்து போன் செய்து, அவரது பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்லால், தனது மகள்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுமிகள் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் ஐடியையும் கொடுத்துள்ளனர். இதன் பேரில் திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையாளர் வரதராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சென்னை விமான நிலையத்திற்கு சென்ற இரண்டு சிறுமிகளும்,
அங்கு புதிதாக வாங்கிய தொலைபேசியில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையம் விரைந்த தனிப்படை போலீசார், கேரளாவிற்கு செல்ல காத்திருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்திற்கு வரச்சொன்ன அந்த All in All அழகுராஜா மேதா பாரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளை பெற்றோர் முறையாக கண்காணிக்காவிட்டால் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post