வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நித்யானந்தா தொடர்பான பல்வேறு வழக்குகளில், கர்நாடக மாநில சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும், ஈக்குவடார் அருகே தீவு ஒன்றை வாங்கி, கைலாசா என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உள்ளார் எனவும் தகவல் வெளியானது.
இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் உயிரிழந்த சங்கீதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாயார் ஜான்சி ராணி குற்றம்சாட்டியதையடுத்து, அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, நித்யானந்தாவை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரவும், அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பெற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு, அனைத்து விவரங்களையும் மத்திய விசாரணை அமைப்புக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.