கடலூரில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சில வருடங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்ததால் விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனை முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்ற கடலூர் நாடாளுளமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை வைத்தார். இதனையடுத்து திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வெள்ளாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது தடுப்பணைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.