தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சாதனை செய்தது அதிமுகதான் என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் இதனை மறைத்து வருவதாகவும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் கழக உறுப்பினர்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் குமாரம் பகுதியில் கழக உறுப்பினர்களுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக, ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்பத்துறையில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளதாகவும், இதனை தற்போதய முதல்வர் ஸ்டாலின் மறந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.