திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடவுள்ளார். அவர் குறித்த தகவல்களை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, களசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், பி.எஸ்.சி விவசாய பட்டப்படிப்பை முடித்துள்ளார். விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். 1978ஆம் ஆண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரி மாணவரணி அமைப்பாளராக இருந்தார்.
1983 ஆம் ஆண்டு கலசபாக்கம் வேளாண்மைத்துறையில் வேளாண்மை அலுவலராக பணி கிடைத்துள்ளது. 5 ஆண்டுகள் அரசு பணியாற்றிய அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டு 1988ஆம் ஆண்டு அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். அதிமுகவில் தொண்டர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் என படிப்படியாக முன்னேறிய அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, தொல்லியல்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். மக்கள் நலப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டதால், தற்போது திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
Discussion about this post