கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் உட்பட 124 பேர் டெல்லி வந்தடைந்தனர்.
ஹாங்காங்கில் இருந்து மூவாயிரத்து 700 பயணிகளுடன் டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக்கப்பல் அண்மையில் ஜப்பானுக்கு புறப்பட்டது. ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 3ம் தேதி முதல் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கப்பலில் இருந்த தமிழக பயணிகள் உட்பட பலரும் கடும் சிரமம் அடைந்தனர். தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள், இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பேர் என 124 பேர் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.